மே 03, 2010

என் சாவுக்காவது வருவாயா? - காதல் தோல்வி கவிதைகள்

(‘கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’யுடன் பேசுதல் என்று பெயர். கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்; அதுவும் காதலின் சோகத்தை. சிறுபான்மை ஆன்மிகத்தையும் பாடும். கஸல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளை இணைக்க வேண்டி இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும் வேண்டியதில்லை. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ போன்ற மேற்கத்திய வடிவங்களைத் தமிழ்மொழிக்கேற்ப மாற்றங்களைச் செய்துகொண்டது இக்கஸலுக்கும் பொருந்தும். பேச்சுச் சந்தத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் அம்முறை தமிழில் தவிர்க்கப்படுகிறது. எனவே தமிழ்க் கஸல் புதுக்கவிதை வடிவில் காணப்படுவதால் புதுக்கவிதை ஆகிவிடாது. தமிழில் முதலிரண்டு (மின்மினிகளால் ஒரு கடிதம், ரகசியப் பூ ) கஸல் கவிதைத் தொகுதிகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைத்துள்ளார்.)

என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்

நீ
துப்பிய எச்சிலாள்
கிருமியாய் வளருகிறது
என் காதல்


• காதல் கவிதைகளைக்
கிறுக்கியவன் இறைவன்
அதன் அர்த்தம் புரியாததால்
கல்லறையில்
காதலர்கள்


• இறைவா
உன் சந்நிதியில் என்ன
எல்லைப் பிரச்சினை?


• இறைவா
நீ சுமந்த சிலுவையை
இன்று
ஒவ்வொரு காதல் தோல்வியும்
சுமக்கின்றன


• உச்சநீதி மன்றத்தில்
காதலர்களே வாதாடுகிறார்கள்
முதன் முறையாக
நீதிதேவதையின் கண்கட்டு
அவிழ்க்கப்பட்டுள்ளது


• என் கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


• நீ
என்னை
மறந்துபோய்
நினைத்திருக்கலாம்
துன்பத்தில்
நினைக்கும்
பக்தன்போல


• நீ
என் கனவுகளைப் புதைத்து
நினைவுகளை எரித்த
வெட்டியாள்


• உன் அழகைப் பிடுங்கிப்
போர்த்திக்கொண்ட பூக்கள்
தன் அழகைப் பார்த்து
கர்வப்பட்டுக்கொண்டது


• கையாலாகாதவன் நான்
காதலை
விட்டுக்கொடுத்துவிட்டு
தெய்வீகக் காதலென்றேன்


• என் காதல் கொடி
எட்டி மரத்தை
இறுக்கப் பிடித்துக்கொண்டது


• நாம்
காந்தத்தின்
எதிர் துருவங்கள்
இருந்தாலும்
விலக்கப்பட்டுவிட்டோம்


• வா, வேண்டுமானால் காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்


• இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது


• வா, உடம்பை
பதியம் போடுவோம்
இறைவனுக்கு
விளையாடப் பொம்மைகள்
வேண்டுமாம்


• இறைவா!
நீ எழுதியக்
கவிதைகள்
நவீனமாகிவிட்டன


• விட்டுக்கொடுத்தல்
பெருந்தன்மையா?
கையாகாலாதத்தனமா?
இறைவா
விளக்கம் கொடு?


• காதல் தோல்விக்குத்
தற்கொலையா?
வெட்கப்படுகிறது
கல்லறை


• ஒரு கன்னத்தில் அறைந்தாய்
மறு கன்னத்தைக் காட்ட
சக்தியில்லை


• நீ
எனக்குச்
செயற்கைச் சுவாசம்


• நாம்
காதலிலேயே வாழ்ந்து
வாழ்க்கையை
முடித்துக்கொண்டோம்


• காதல் அழகானது
வாழ்க்கைப் பாழானது


• உன் நினைவுக்கு
என் கவிதை
அஞ்சலி செய்கிறது


• உன்னால்
இறைவனின்
படைப்பு சுதந்திரம்
பறிபோய்விட்டது


• உன் காதல்
மரத்திற்கு மரம் தாவுகிறது
நீ
குரங்கிலிருந்து பிறந்தவள்


• இறைவா
சுகம் அழைத்தபோதும்
உன் சந்நிதியில்
விட்டிலாய் கிடக்கிறேன்


• வீட்டைப் பெறுக்கிச்
சுத்தம் செய்து
குப்பையில் கொட்டிவிட்டேன்
காதலோடு சேர்த்து
உன் கவிதைகளையும்


• காதல் ஒன்று சாகும்போது
பூ வாசம்
உடன்கட்டை ஏறுகிறது
சுவாசக் கட்டை ஒன்று
பட்டுப்போய் விடுகிறது


• பாவபுண்ணியங்களை
தலை மூழ்கினேன்
என் ஆடைகள்
காணவில்லை


• உன்
பொன்னாடையைத் தா
உடல் குளிர்கிறது


• வானமெங்கும்
கொட்டிக் கிடக்கிறது
நிலவின் முத்தம்
நட்சத்திரங்களாக


• மழைச் சாரலாய்ப் பொழிகிறது
தூவானத்தின் கவிதைகள்


• நாம்
கையும் களவுமாக
பிடிபட்டு விட்டோம்
இறைவனிடம்


• இறைவா
உனக்குப் பசிக்கும்போது
என்னை
பறிமாறிக்கொள்

• உன் பிரிவால்தான்
நம் காதல்
உயிர் வாழ்கிறது


• என் பெயரை
பச்சைக்குத்திக் கொள்ளாதே
மணவறையில்
பெயர்கள் மாறிவிடலாம்
• நீ
ஒளிந்துகொண்டிருக்கிறாய்
அது கூடத் தெரியாமல்
நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்


• கடிதத்தைப் படித்து
எச்சில் துப்புகிறாய்
அது பூ விதழ்களாய்
அதன் மேல் விழுகிறது


• இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ
கிழித்தெரிந்தாய்


• என் நண்பன்
செத்துக்கிடக்கிறான்
நீ
பிரிந்து போகிறாய்


• பூக்களின் எச்சில்
தேன்
காதலின் எச்சில்
முத்தம்


• இறைவன்
பேன் பார்க்கும் சாக்கில்
மறந்து போன
என்
தலையெழுத்தைப் பார்க்கிறான்

• உன்
நினைவுகள் கனவுகளையும்
தூங்க விடுவதில்லை


• நவீன விட்டில்
விளக்கை அணைத்துவிட்டு
சூரியனில் பாய்கிறது


• மொட்டுக்கள்
அழுது சேர்த்தக்
கண்ணீர்தான்
தேன் துளிகள்


• பிரிவுகள்
சோகமானபோதும்
கவிதைகள்
அழகாய் இருக்கின்றன
• இறைவன்
ஓட்டி விளையாடும்
வாழ்க்கைச் சக்கரம்
பாதியிலேயே
தடம் புரண்டுவிடுகிறது


• அவள்
ஏற்படுத்திய
காயத்திற்கு
நீதான் மருந்து


• இறைவனுக்குக்
கோபம் இருக்கும்
நான்
அதிகம் உச்சரிப்பது
உன் பெயரை


• உனக்கு
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
அர்த்தம் தெரியவில்லை

• உன்னால்
இறைவனின் கனவே
தகர்ந்து விட்டது


• என் சோகத்திற்கு
குயிலும் வானம்பாடியும்
இரங்கல் பாடுகிறது


• உன்னை
மேய்ப்பதற்குள்
எனக்குத்
தண்ணிகாட்டி விடுகிறாய்• உன்னால்
கோயில்
பொழிவிழந்து
காணப்படுகிறது• நாம் விளையாடுவது
கண்ணாம்பொத்தி
நான்
எங்கே போய் ஒளிய
நீ பிரகாசித்துக் கொண்டுள்ளாய்


• எல்லா எழுத்துக்களையும்
கவிதையாக்கி விட்டேன்
பேச வார்த்தையில்லாததால்
பைத்தியக்காரனாய்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்


• காதலி கை விட்டதால்
உன் கால் பிடிக்கிறேன்• உன்னைப் பழிப்பதற்காக
நரகம் வேண்டாம்
உன்னைப் புகழ்வதற்காகச்
சொர்க்கமும் வேண்டாம்
என்னைக்
காதலியிடத்தில்
சேர்த்துவிடு போதும்• காதலர்களுக்குச் செவிசாய்ப்பதா?
பெற்றோர்க்குச்
செவி மடுப்பதா?
குழப்பத்தில் இறைவன்


• ஒவ்வொரு
தோல்வியிலும்
மாரடித்துக்கொண்டு அழுகிறது
பாவம் காதல்


• தவளைத்
தன்வாயால் கெடுவதுபோல்
நான்
என் காதலால் கெட்டேன்


• எழுதாதக் கவிதைகள்
அரும்பாத மொட்டுக்கள்• அரும்பு மீசைக்குப்
பூச் சூட்டியவளே
இன்று வா
சடைப் பின்னிப்
பூ வைப்பாய்


• நீ குற்றவாளி
வெட்கப்படாமல் சிரிக்கிறாய்


• கூட்டிக் கழித்துப் பார்த்தேன்
காதலில்
கண்ணிர்தான் மிச்சம்


• ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினை உண்டாம்
என் காதலுக்கு
அது இல்லாமல் போனது


• என் இதயத்தை
வாங்கிக் கொண்டு
ஏமாற்றி விட்டாய்
கடன்காரன் போல


• எனக்குப்
பாடை கட்டாதீர்கள்
சவக்குழி வெட்டாதீர்கள்
நெருப்பும் மூட்டாதீர்கள்


• இறைவனின் தோட்டத்தில்
நமக்கு
விருப்பமானப் பூவை
நாமே
பறித்துக் கொள்ளலாம்


• நிலவுப் பெண் படிக்க
என் கவிதைகளை
நட்சத்திரங்களாக்கி விட்டேன்


• என் பாடையைச் சுமக்க
காதலி!
நீ
மட்டும்தான் இருக்கிறாய்
• மலர்ப் பாதத்தில்
பூக்கள் இருப்பதை விட
அவள் கூந்தலில்
அழகாயிருக்கிறது


• உன் கேமிரா கண்ணில்
படைப்புகள்
கவர்ச்சியாயிருக்கிறது• தோட்டத்தில்
எந்தப் பூவைப்
பறிக்கப் போகிறாய்
எல்லாப் பூக்களும்
சிரித்துக்கொண்டிருக்கிறது


• பூக்களும்
சண்டைப் பிடிக்கிறது
காற்றோடும் வண்டோடும்


• சோகம் அழகாய் இருக்கிறது
பூந்தோட்டத்தில் பூக்கும்போது


• உன்
மெளனம் பேசுகிறது
வாய் ஊமையாகிவிட்டது


• எரியூட்டப்படாத
பிரேதங்களாய்
இனி நாம்
உலவ வேண்டும்


• கண்ணீர் வெள்ளம்
என்னைக் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறது• என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு கருவறை
ஒரு கருவறை
இறைவனைச்
சுமந்துகொண்டிருக்கிறது


• உன் காதலை
பாவமன்னிப்புச் சீட்டில்
எழுதிப் போக்கிக் கொண்டாய்
எனக்கு மது


• வேலைகளின் அவசரங்களில்
இடைமறிக்கும்
டிக்கேட் பரிசோதகரைப் போல்
நீ
என் வாழ்வில்
குறுக்கிட்டாய்


• சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
பிறந்த குழந்தைகள்தான்
நட்சத்திரங்கள்


• வா, உடம்பைப்
பதியம் போடுவோம்
இறைவனுக்கு
விளையாடக் குழந்தைகள்
வேண்டுமாம்


• இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ
படிக்காமல் கிழித்தெரிந்தாய்


• என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்


• நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
காதலி
என்னைத்
தண்டித்து விட்டாள்


• உன்னைக்
குற்றம் சொல்ல மாட்டேன்
நீ
இறைவனின் படைப்பு


• உன் நினைவுகளில்
கண் மூடினேன்
நான்
இறந்து விட்டதாய்
நினைத்துப்
பாடைகட்டி விட்டிருக்கிறார்கள்


• நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன்
பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது• காதலுக்குக் கண் இல்லை
அதனால் தானோ என்னவோ
இறைவா
நீ இருப்பது அப்போது
தெரியாமல் போய்விட்டது


• மழைநாளில்
நீ
எனக்குக் குடை பிடித்தாய்
நான்
பூக்களுக்குக் குடை பிடித்தேன்


• நீ
என்னை
ஒன்றுமே செய்யவில்லை
உன் நினைவுகளே
என்னைக் கொன்று விட்டது


• கடித்தக் கொசு
என்னிடமே
அடிபடுவதுபோல
என் காதலும்
என்னிடமே
அடிபடுகிறது


• 
• எறிந்த
‘கவண்’ல் கல் மட்டும்
தூரப் போவதுபோல்
உன் நினைவும்
தூரப்போய் விழுந்து விட்டது


• உன் நினைவுகளைக்
கசக்கிப் பிழியும்போது
கண்ணீர்க் காம்புகள்
சுரந்து கொள்கின்றன


• நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்• காதலர்கள் நாம்
ஏன் சாகவேண்டும்?
பூவும் வண்டும்
செத்தாப் போகிறது?


• நீ
நீயாக இருக்கும்போது
நான் நீயாகி விடுகிறேன்


• என் கவிதையின் அழகை
நீ
உன் வீட்டு
கண்ணாடியில் பார்


• நீ
செருப்பைக் காட்டினாய்
அது
இறைவனின் கையாய்
ஆசீர்வதிப்பதாய்ப் பட்டது


• நீ
விலகியபோதுதான்
உன் போதையால்
உடல் உறுப்புகள்
செயலிழந்தது


• நீ
முடி வளர்க்கின்றாய்
நான்
மொட்டைமாடியில்
பூச்செடி வளர்க்கின்றேன்


• கனவில்
மறைந்த பாதை
நீ


• ஆசைக்கும்
பேராசைக்கும்
இடையே
காதலின் ஆயுள்
கழிகிறது


• உன் அருளை
எனக்கும் கொஞ்சம்
வைத்திரு
வரிசையில்
கடைசியாக வருகிறேன்


• காதலி
பூக்களைப் பறித்தால்தான்
மாலை சூட முடியும்


• ஒருவருக்கு
ஒருவரை
ஏன் பிடித்துப்போகிறது?
பூக்களை ரசிக்காதவர்கள்
யாரேனும் இருப்பார்களா?


• என் காதல்
ஆலயத்திற்கு வெளியே
உள்ள
பிச்சைப்பாத்திரம்


• ஆலயத்திற்கு வெளியே
பிச்சைப்பாத்திரம்
ஆலயத்திற்கு உள்ளே
உண்டியல்


• காதல்
விளக்கைத்தேடும்
விட்டில்• உன் உயிர் வேண்டாம்
காதலை மட்டும்
விட்டுக்கொடு
அது போதும் எனக்கு
• தூணிலும் துரும்பிலும்
இருப்பவன் நீ
என் காதலியிடத்தில்
இல்லாமல்
போய்விட்டாயே?


• என் கவிதைகள்
காதலைச் சுமக்கும்
சிலுவைமரம்
மறுஉயிர்ப்போடுத்
துளிர்க்கிறது


• காதலியிடம்
குறை இருக்கலாம்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
இறைவனின் குறை


 செல்லாதக் காசுகளை
உண்டியலில்
சேர்த்து வைத்துள்ளேன்


• உன்னை இழந்தது
சோகம் தான்
பரவாயில்லை
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றைப்
பெற முடியும்


• இறைவா
என் நினைவுகள்
அவனுக்கு
சந்தோசத்தை மட்டுமே
கொடுக்க வேண்டும்


• என் கவிதைகளை
என்னிடமே சேர்த்துவிடு
காதல் செத்துப்போகட்டும்
பாவம்
கவிதைகளாவது
வாழட்டும்


• ஆலயத்தில் வாசகம்
சப்த்தம் போடாதே!
இறைவா
நான் எப்படி
புலம்பாமல்
இருக்க முடியும்?


• இறைவன்
கொடுத்த வரம் நீ
நீ
கொடுத்த வரம்
இறைவன்


• இக்கவிதைகள்
காதலின் கண்கள்
பாவம்
கண்ணீர் சொட்டுகிறது


• நிலவு
கன்னத்தில் அறைந்ததால்
விண்மீன்
பூமியில்
சமாதியானது


• என் கவிதை
சிலுவை மரத்தில்
மூன்றாம் நாளல்ல
நீ வாசிக்கும்
அன்றுதான்
உயிர்த்தெழும்


• நீ
விலக்கப்பட்ட கனி
அறியாமல்
உன்னைப்
பறித்துவிட்டேன்


• மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
உன்னைப் புதைப்பார்கள்
என்னை எரிப்பார்கள்


• என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்கைப்பேசி - 98652 24292

2 கருத்துகள்: