ஜனவரி 14, 2012

© ம.ரமேஷ் கஸல் (கவிதை)கள் -3காதலியின்
உயிரை  எடுக்க  வந்த
எமன்
ஏமாற்றி
என்  உயிரை
பறித்துக்கொண்டான்

நாம்
சேர்ந்து  வாங்கிய
முகூர்த்தத்  துணி
எனக்கு  மட்டும்
கோடித்துணி  ஆனது

காதல் 
அகல்  விளக்கு
ஒவ்வொரும்
கண்ணீரை  ஊற்றி
விளக்கேற்றி  வைக்கிறார்கள்

ஒரு  நாள்
கடவுளின்  தலைவிதியைப்
பகிரங்கமாகப்
படித்துப்  பார்த்து  விட்டேன்

நீ
கெட்ட  கனவு
விழித்தெழுந்து  படுத்தாலும்
தொடர்ந்து  வருகிறாய்

என்  வலக்கண்
அழுவது
உன்  இடக்கண்
அறியாதிருக்கட்டும்

உன்  கால்தடம்
திரும்ப  முடியாத
ஒற்றையடிப்  பாதை

ஏழு  ஜென்மம்
உண்மையோ  பொய்யோ
வா,  இந்தப்  பிறப்பை
புனிதப்  படுத்துவோம்

வா
கோயில்களே
இல்லாத  ஊரில்
குடிபுகுவோம்
அங்கேதான்
இறைவன்  இருக்கிறான்

காதலின்  சிதையில்
நான்  மட்டும்
என்  காதலோடு
சாம்பலானேன்
நீ
என்  சாம்பலிலிருந்து
கண்  மை  தயாரித்துக்கொண்டாய்

உன்  காதல்
என்  வாழ்க்கையின்
குறிக்கோள்

பிறப்பில்
விழித்த  நாம்
இறப்பில்
கண்  உறங்குகிறோம்

புல்மேல்  பனித்துளி
உன்மேல்  அழகு

என்  உயிர்
என்  உடலுக்கு  வெளியே
உன்னிடம்  உள்ளது

நீ
தனித்து  வரவில்லை
உன்னுடன்
மரணத்தையும்
அழைத்து  வந்தாய்

உன்  நினைவு
கட்டுச்சோறு
ஒற்றையடிப்  பாதையில்
சுமந்தாக  வேண்டும்

பெண்ணிலும்  முள்
இதயம்

காதலி
சொர்க்கத்தின்  நுழைவாயில்
திருமணம்தான்
வா,
வலதுகாலை  எடுத்து  வைப்போம்

நான்
கடல்  அலை
உன்  அப்பா
கடல்  கரை
ஓயாமல்
காலைப்  பிடித்துக்  கெஞ்சுகிறேன்

நீ  சென்று  விட்டாய்
நீ  அழைத்து  வந்த
மரணம்
என்னைக்  கை  பிடித்து
அழைத்துச்  சென்றது

வாழ்க்கைப்  பாதையில்
நீ
நிழல்
சிறிதுநேரம்
இளைப்பாறிக்  கொள்கிறேன்

எல்லா  ஊரும்
நம்  ஊரில்லை

என்  காதலை
உன்  கள்ளக்  காதல்
சாகடித்துவிட்டது

நாம்
நம்மை  நாமே
ஏமாற்றிக்  கொண்டோம்

வா
அடுத்த  வானவில்
தோன்றும்போது
திருமணம்  செய்துகொள்வோம்
திருமணத்திற்குச்
சாட்சி  வேண்டுமில்லையா?

உன்  வருகை
நல்ல  காரியம்
என்று  நினைத்தேன்
ஆனால்  எனக்குக்
காரியமே  நடத்திவிட்டாய்

துடிதுடித்து  இறந்தது
விட்டில்
ஆனாலும்
விளக்கின்  பக்கத்தில்
சிறகு

உன்  நினைவுகளில்
மூழ்கினேன்
எண்ணங்களும்
மறைந்துபோனது

நீ
என்னை  மறந்து  விடு
ஒரு  துன்பம்போல
நான்  இருக்கிறேன்
உன்னை  நினைக்க

நான் அழுது
இறைவனைப் பெற்றேன்
நீ அழுது
என்னைப் பெற்றாய்

தன் அழகைத் தானே
திரும்பி பார்க்கும்
மயில் போல்
உன் பேரழகை
நீ
கண்ணாடியில் பார்க்கிறாய்

எதிரே  வரும்போது
கண்  மூடிச்  செல்கிறாய்
போ
நமக்கென்ன  அழுவது
கண்கள்தான்

மன்னிப்பு
கேட்டுவிட்ட  பிறகும்
நீ  என்னை
தண்டித்து  விட்டாய்


அவள்  கூந்தலில்
சிக்குண்டது
கவிதைப்  பூக்கள்

மண்  பிசைந்தால்தான்
பானை  செய்ய  முடியும்

வா,  காதலி
நாம்
உண்மைகள்  பேசுவோம்

எண்ணிக்  கொண்டிருந்த
நாட்கள்
நட்சத்திரங்களாய்
அதிகரித்து  விட்டது

பூக்களின்  அருகில்
காதலர்கள்
மெளனமாக

உன்
முகத்திரைக்கு  முன்னால்
நான்
எரிந்துகொண்டுள்ளேன்

சுடாத  பானையில்
என்
கண்ணீர்த்  துளிகள்

பூவைப்  பார்த்து
சிரித்தேன்
பூவோடு  சேர்த்து
என்  புன்னகையையும்
பறித்துக்  கொண்டாய்

உன்  முகம்
மறைந்து  போனது
கரைபுரண்டோடிய
ஆற்றின்  பாதை
மறைந்து  போனதுபோல

வெற்றிக்கும்
தோல்விக்கும்
இடையில்  இருக்கிறது
காதல்        

உண்டான  பாரத்தை     
இறக்கி  வைத்தேன் உன்னால் 
சுமைத்தாங்கியும்  
அந்தச்  சுமையைத்
தாங்கவில்லை

நீ 
எந்தக்  கதவைத்  தட்டினாலும்
திறக்கிறாய்

இனி  என்  பாரத்தை
எங்கு  இறக்கி  வைப்பேன்

நீ  தவறி
பிச்சையிட்டதாள்
என்  பாத்திரத்தையே
அபகரித்துக்  கொண்டாய்

பூவுக்குத்தான்
அழகு  தேவை
வண்டுக்கு  எதற்கு?

உன்  கனவிலும்
நீ  வழி  தவறுவதில்லை
உன்  கனவு
தனிமையில்  நடக்கிறது

உனக்குக்
கண்ணீர்
அழகாயிருந்தது
இன்று
என்  கண்ணீர்?

உன்னால்
எனக்கு  உண்டான
பெரு  மூச்சு
பின்நாளில்
மூச்சிறையானது

நீ
என்  கண்ணீரால்
மன்னிக்கப்படுகிறாய்

4 கருத்துகள்:

 1. kalakkal annaa....kasal kasal nnu ivvalavu feelings kotturinhal...super

  பதிலளிநீக்கு
 2. தங்கள் கவிதைகள் அபாரம்.புதிதாய் வருபவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.
  பாராட்டுக்கள்.
  முல்லைஅமுதன்
  http://kaatruveli-ithazh.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. //நான்
  கடல் அலை
  உன் அப்பா
  கடல் கரை
  ஓயாமல்
  காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்//

  நகைக்க வைக்கும் நல்ல சிந்தனை!

  பதிலளிநீக்கு