மார்ச் 10, 2012

கஸல்


திருமணத்திற்கு
வராதவர்கள்கூட
சாவுக்குக்
கண்டிப்பாக வருவார்கள் என்பார்கள்
நீ
என் சாவுக்காவது
வருவாயா?

வேண்டும் என்கிறபோது
மறுக்காமல்
முத்தம் கொடுக்கிறது
மதுக்கிண்ணம்

அன்று
காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையை
நீ
கேட்கவும்
நான்
சொல்லவும்
தயாராக இல்லை

இன்பத்தைக் கூட்டிக்
கொடுத்துவிட்டுப் போனதால்
இன்று
கண்ணீர்த் துளிகளால்
கழிக்கிறோம்

வண்டுக்கு
எங்குச் சென்றாலும்
தேன்
கிடைத்துவிடுகிறது

காதலின்
வழிகாட்டி மரம்
இக் கவிதைகள்

நீ
உன் காதலைக் கடைந்தபோது
வந்த நஞ்சுதான்:
நாம் பிரிந்துவிடுவோம்
என்கிற வார்த்தை

உன் நினைவுகளை
எண்ணுகின்றன
சிந்தும்
கண்ணீர்த் துளிகள்

பூவின்மேல் இருந்த
வண்டினைக் கண்டு
பூவினைப் பறிக்காமல்
திரும்பியவளா
நீ?

குயில்கள்
தனித்தே பாடுமாம்
என்
தனிமையின்
சோகப் பாடல்கள்தான்
இந்தக் கவிதைகள்

முதல் கண்ணீர்த்
துளியில்தான்
காதல் என்ற புத்தகத்தின்
முதற்பக்கத்தைப் புறட்டிப் படிக்கத்
துவங்குகிறோம்

நினைவுகள்
மனப்பாடமாக இருந்தாலும்
எங்கே மறந்துவிடப் போகிறோம்
என்றெண்ணி
அடிக்கடி நினைத்துப் பார்க்கும்
காதல் மனம்

என்று நிகழ்ந்தாலும்
என் மரணத்தின்
கடைசி நொடி
உன்னைக் கடைசியாகப் பார்த்த
முகத்தின் புன்னகையோடுதான்
என் மூச்சு முற்றுப் பெறும்

எங்கும்
நீக்கமற
நிறைந்திருக்கிறது
காதலின் துன்பம்

நினைக்கும்போதெல்லாம்
கண்ணீர்த் தரும்
ஓர் அற்புத உறவுதான்
நீ

இறைவா
வருவதென்றால்
வந்துவிடு
கருவறையிலிருந்து

திரை மறைவில்
ஆடைகள்
மாற்றப்படுகின்றன

வீடு செல்லும்
பாதையில்
நீ
எதிர்ப்படுகிறாய்

நீ
என் பாதைக்குப்
புதிய வழிகாட்டி மரம்

உனக்கும் எனக்குமானக்
கண்ணீரைச் சேர்த்துச் சிந்தும்போது
வரும்
கண்ணீர்த் துளிகள்கூட
வலிக்கிறது என்று அழுகிறது

காதலித்தாயா?(என்றான்)
இல்லை (என்றேன்)
மறுபடியும்
ஆணாகப் பிறக்கக்கடவாய் என்று
வரம் கொடுத்துத்
திரும்ப அனுப்பிவிட்டான்

நீயும் நானும்
அருகிலேயே இருந்தோம்
பட்டத்திற்கும்
நூலிற்குமான
இடைவெளியில்

கண்ணீர்தான்
தண்டனை என்றால்
கை குட்டைதான்
விலங்கு

நீ
சொர்க்கத்திற்கும்
நான்
நரகத்துக்கும்
செல்லும் பாதையின்
இடையில் எதிர்படுகிறோம்

நீயே சிரித்தாய்
நீயே அழுதாய்
நீயே காரணமும் சொன்னாய்
நீயே பிரிந்துவிட்டோம் என்கிறாய்

அழுகையைத்
துவக்கி வைப்பவளும்
நீ
அழுகையை
முடித்து வைப்பவளும்
நீயே

உயிர்
உயிர் என்கிறாய்
உன் உயிரும்
என் உயிரும்
தனித்தே தான் இருக்கிறது

சத்தியம்
எல்லாம் சும்மா என்பது
காதல் தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்

நம் காதலை
உருத் தெரியாமல்
அழித்துவிட்டது
திருமணம்

என் நினைவுகள்
ஏன் என்கிறாய்?
என்னிடம் வரும்
உன் நினைவுகள்
உன்னிடம் சொல்லிவிட்டா
என்னிடம் வரும்

உன்னைவிடச் சிறந்தது
உன் நினைவுகள்தான்
அது
உன்னிடம்கூட
சொல்லிக்கொள்ளாமல்
என்னிடம் வந்துவிடுகிறது

பூக்களின் மேலிருக்கும்
வண்டுகளைப்
பறவைகள்
ஏக்கத்தோடு பார்க்கின்றன

காதல் சிறைதான்
இருந்தாலும்
அந்தக் கூண்டுக்குள்தான்
நாம்
நம் சிறகை விரித்துப்
பறக்க முடியும்

உன்னை மட்டுமல்ல
உலகத்தையே
மறக்கச் செய்யத்தான்
காதல்
படைக்கப்பட்டுள்ளது

இக்கவிதைகள்
காதலுக்கானக்
கண்ணீர் மாலை

நம்மைக் கடந்துச்
சென்ற காற்று
பூக்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்
வண்டுகளிடம்
எப்படிப் பேச வேண்டுமென்று

3 கருத்துகள்:

 1. பாராட்டுக்கள் நண்பரே

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  பதிலளிநீக்கு
 2. அருமையான கஸல்கள்! காதல் சொட்டும் வரிகள்! பாராட்டுக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 3. உன் கவிதைகளை

  படித் தேன்

  மலைத் தேன்

  சிரித் தேன்

  அழு தேன்

  துடித் தேன்

  உணர்ந் தேன்

  கொதித் தேன்

  குமைந் தேன்

  மொத்தத்தில் உன் கவிதைகளை

  சுவைத் தேன்

  பதிலளிநீக்கு