அக்டோபர் 01, 2012

கடவுள் – 4 , 5


கடவுள் – 4

பேரூந்தில்
முன் இருக்கையில் அமர்ந்து
பயணிகளோடு பயணித்துக்கொண்டிருந்தார்
கடவுள்.
சில்லரை இல்லையென்றால்
இறங்கிக்கொள் என்று
கடவுளையே எச்சரித்த நடத்துநர்
மீதிச் சில்லரையைத் தராமல்
கடவுளையே ஏமாற்றினார்!
செல்போன் சிணுங்க
கால் மேல் கால் வர
முக்கால் மணி நேரமாகப்
பேசிக்கொண்டே வந்துகொண்டிருந்தார்
பேரூந்து ஓட்டுநர்!
முந்தும்போதும்ஒதுங்கும்போதும்
கடவுளே நடுநடுங்கிட
பயணிகளுக்குப் பழக்கப்பட்டதால் பயமின்றி
பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

கடவுள் – 5

பிணம் எரிக்கக்கூட
கான்கிரெட் கூரையாக்கிவிட்ட சூழலில்
கிராமத்தின் ஓட்டைக் குடிசையில்
கடவுள் நிம்மதியாக உறங்கி எழுந்தார்!
சாலை சரியில்லை
கேபிள் டீவி இல்லை
இன்டர்நெட் இணைப்பு இல்லையென்று
நகரத்துக்குப் போக முடிவைடுத்து
நகரத்தில்
வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார்!
பவர் கட்டால்
கடவுளின் உடல்
வியர்வையால் விழிப்புற்றே இருந்து எழுந்தார்!
சமையல் செய்யலாமென
ஆரம்பிக்கும்போது இருந்த மின்சாரம்
சட்னி அரைக்கும்போது கட்டாகியிருந்தது.
வெறும் இட்லி சாப்பிட்ட
கடவுளுக்கு ஞாநோதயம் வந்தது!
வரும்போது
உலக்கை, அம்மி, ஆட்டுக்கல்லை மறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக