பிப்ரவரி 19, 2013

கடவுள் – 20 (கடவுள் இல்லை என்றார் கடவுள்!)


தமிழ் ஈழம் காண
உல்லாச பயணம் புறப்பட்டார் கடவுள்.
ஏதோ சண்டை என்ற கேள்விப்பட்டார்.
அட எப்படித்தான்
சண்டை போடுகிறார்கள் என்று
மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தார்.
சண்டை என்றால் சண்டை
பயங்கர சண்டை
சண்டை என்றால் சங்கப் போர் அல்ல.
ஆய்தம் ஏந்திய படைகளுக்கும்
கையில் ஆயுதம் ஏதுமற்றவர்களுக்கும்!
இந்த சண்டையை எந்தப் வகையில் சேர்ப்பது.
தலைவர்களைப் பிடிப்பதுதான்
அவர்களது லட்சியமாக இருந்தது.
தலைவர்கள் அகப்படாதபோது
அவர்களின் குடும்பத்தினரை
காவு வாங்க முடிவைடுக்கப்பட்டது.
தகப்பன்கள் செய்த நல்ல செயலுக்காக
மனைவிகளும் பிள்ளைகளும்
துன்புறுத்தப்பட்டார்கள்.
கொலை கொள்ளை கற்பழிப்பும் நடந்தது.
தட்டிக் கேட்பார் என்று நினைத்த கடவுள்
அது அவர்களின் உள்நாட்டு பிரச்சினையென்ற
தகவல் கேட்டு திடுக்கிட்டுப்போனார்.
சரி நாம் தான் எதாவது செய்ய வேண்டும்என்று
கடவுளுக்கும் புத்தி வரவே இல்லை.
நாம் படைத்ததை இவர்கள் அழிக்க யார்
அதிகாரம் கொடுத்தது என்ற
உணர்ச்சி கூட இல்லாமல்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார் கடவுள்.
தலைவனின் மகன் பிடிபட்டான்.
இரண்டு நாள் உணவு கொடுக்கப்பட்டது
இந்தச் சிறுவனைக் கொன்று
நாம் சாதிப்பதென்ன…
யாருக்கும் கொள்ள மனம் வரவில்லை.
கொல்ல உத்திரவு.
நான்கு அடி முன்னால் சென்று
துப்பாக்கி குறி பார்த்தது.
தீபாவளி துப்பாக்கியைப் பார்த்தவன்
ஆசைப்பட்டு அங்கிள் அதை கொடுங்கள்
நான் விளையாடிட்டு தருகிறேன் என்றான்.
சுடத் துணிந்தவன் அழுதுகொண்டான்!
ஏன் அழறீங்க…
கொடுக்க விரும்பம் இல்லன்னா
அழாதீங்க என்றான்!
கண்களை துடைத்தும் விட்டான்.
திரும்ப ஒருவன் குறி பார்த்தான்
சிறுவனுக்கு விபரீதம் புரிந்தது
ஆனாலும் சிரித்துக்கொண்டான்
சுடுபவனை நினைத்து!
ஏனென்றால் அவனுக்குப் பின்னால்
கடவுள் சிரித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
காப்பற்றப்பட்டுவிட்டோம் என்று நினைத்தவனை
நான்கு தோட்டாக்கள் துளைத்தன.
இறந்தது நான் அல்ல
கடவுளே நீ தான் என்று சொன்ன
அந்தச் சிறுவனின் கண்கள் இருண்டது.
சுட்டவன் திரும்பிப் பார்த்து நடுங்கிப்போனான்
பக்கத்தில் தெரியாத யாரோ புதியவர்!
அந்தப் புதியவரான கடவுளிடம்
இப்ப சொல்லுங்கள்
கடவுள் இல்லைதானே என்றான்.
கடவுளோ… தனக்கு பிறப்பு இறப்பு இல்லை
முக்காலம் கடந்தவன்
பரிபூரணமானவன்
துன்பம் என்றால் ஓடோடி வருபவன் என்ற
மிகையான கற்பனைகளை
காதில் வாங்கிக் கொள்ளாமல்
கையில் இருந்த துப்பாக்கிக்குப் பயந்துபோன கடவுள்
ஆமாம்
கடவுள் இல்லை என்றார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக