செப்டம்பர் 12, 2013

கடவுள் கடவுளாகிப்போனார் -21

கடவுளுக்குப் போர் அடித்தது
திரைப்படம் பார்க்கப் போனார்

செய்தித் தாள்கள்
திரைப்பட விமரிசனங்கள் எல்லாம்
உண்மை சம்பவம் என்றது
ஆவல் பொங்க
சம்பவம் பார்க்க காத்திருந்தார்

புகைப்பிடித்தல்
உடல் நலத்திற்குக் கேடு
புற்று நோயை உண்டாக்கும்
உயிரைக் கொல்லும்!

ம்... கொல்லும் கொல்லும்
என்றது ஒரு குரல்

கடவுளுக்கு ஆரம்பமே அதிர்ச்சி
பெயர், பாத்திரங்கள், கதை, கதைக்களம் எல்லாம்
கற்பனையே!

எல்லாம் பழக்கப்பட்ட
கதைதான்
நடிகன், நடிகைதான் வேறு!

அப்புறம் என்ன
கதற கதற  கற்பழிப்பு நடந்தது
இந்தக் காட்சி
சித்திரிக்கப்பட்டது என்றது

முத்தம், கட்டிப்பிடிக்கும்
காட்சிகள் எல்லாவற்றிற்கும்
கற்பனையே என்று எழுத்து வந்தது

பேருந்து, ரயில், விமானத்தில்
சண்டை காட்சிகள்
எரிந்த அனைத்தும்
கிராப்பிஸ் என்றது
நடிகனும் டூப் என்றது

அப்புறம் எதுக்கு அவனுங்களுக்கு
கோடி கோடியா சம்பளம் என்றான் ஒருவன்

யார்ஆ அவன்
அதான் அப்ப அப்ப
ஸ்கிரின்ல
புகைபிடிக்காதீர் என்று
போடறான் இல்லை… அறிவில்ல…

டே நிறுத்துடா…
அப்படி உயிரை கொல்லறதா இருந்தா
கவர்மென்டே
கம்பனிகளை
இழுத்து மூடியிருக்குமுடா!

கடவுள் புகையை
நுகர்ந்தவாறே வெளியேறினார்.
ரசிகன் கட்டவுட்டுக்கு
பால் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது…

பொழுது போக்கு என்று
அதிலேயே பொழுதை போக்கி விடுகிறார்கள்...

தலையில் அடித்துக்கொண்டு நடந்தார்
கடவுள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக