செப்டம்பர் 03, 2013

அதே பிச்சைக்காரி! குழந்தையாய் நான்!!!

கோயில் முன்
பூமாலை வாங்க நின்றேன்-

குழந்தையோடு பிச்சைக்காரி
சாப்பாட்டுக்கு எதாவது குடு ‘சாமி’
பர்சை துலாவினேன்
1,2,5 சில்லறைகள்கள் இல்லை
பத்து ரூபாய் நோட்டு தென்பட
‘சில்லறை இல்ல போமா’ என்றேன்.
“அப்பா பத்து ரூபாயைக் கொடுத்துடுப்பா
குழந்தைய பாக்கப் பாவமா இருக்கு” என்றான் மகன்.
கை, கால் நல்லாதானே இருக்கு
போ… மா…

தரிசனம் முடித்து-
100 ஐ மகனிடம் கொடுத்து
உண்டியலில் போடு என்றேன்.
“ஏம்பா…
சாமிக்கு கை, கால் நல்லா தானே இருந்திச்சி
ஒடைஞ்சி போயில்லையே?” என்றான்.

டே… சாமி கண்ண குத்தப்போவூது…
என்று பலவந்தமாகக்
கையைப் பிடித்து
உண்டியலில் நுழைத்தேன்.

மாலை நேரம் –

இரண்டு பேர் வந்தார்கள்.

‘அந்தச் சாமி’க்கு கூழ் ஊத்துறோம்
டொனேஷன் என்றார்கள்…

பாக்கெட்டிலிருந்து பணம்
எடுத்துக்கொடுத்தேன்.

500 கொடுத்தாதான்
கௌரவமா இருக்கோ என்று
மனைவி கட்டிலில் சிணுங்கினாள்.

காலையில் அந்தப் பிச்சைக்காரிக்கு
10 கொடுத்திருக்கலாமோ என்ற
சிந்தனையில் உறங்கினேன்.

கனவில்
அதே பிச்சைக்காரி

குழந்தையாய் நான்!

1 கருத்து:

  1. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சும்மாவா சொன்னார்கள்?

    உங்க கமெண்ட் மூலம் உங்க ப்ளாக் பார்க்க முடிந்தது.. அட நம்ம மாவட்டம்..! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு