செப்டம்பர் 08, 2014

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 20

‘நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.

யார்? மண் எடுத்து, எதற்காக? எப்போது? ஏன்? யாரை? தூற்றினார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு கோபம், சாபத்தைக் கொடுத்துள்ளது. மண் எடுத்து தூற்றினாள் – வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் நடந்துவிடுமா என்ன? மூன்றாவது அடியில் அந்த சாபம் நடந்துவிட்டு இருப்பது வருத்தம்தான். மூன்றாம் அடியில் படிக்கையில்தான் தெரிகிறது – தாய்தான் மகளுக்குச் சாபம் கொடுத்துள்ளாள். தான் விரும்பியவனோடு வாழ (சொல்லியோ, சொல்லாமலோ) சென்றுவிட்டதைக் காட்டுகிறது. அவள் நன்றாக வாழ்ந்து இருந்திருந்தால் பரவாயில்லை. குழந்தையோடு வீடு திரும்புகிறாள். பாவம். அவன், அவளை கை விட்டுவிட்டானா? அவனோடு வாழ இவளுக்குப் பிடிக்கவில்லையா? எதுவொன்றும் தெரியவில்லை. அப்படி தெரியாமல் இருப்பதுதான் இந்த ஹைக்கூ (இது ஹைக்கூ இல்லை, இது சென்ரியூ)வின் சிறப்பு. எனக்கு என்னவோ… ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எல்லோருக்குள்ளும் இருக்கும் மன நிலையில் அவள் பெற்றோர்களைப் பார்க்கவோ அல்லது பெற்றோர்கள் சமாதானம் அடைந்துவிட்டதால் அவள் வீடு வந்திருப்பாளோ என்றுதான் தோன்றுகிறது. சரி… அவன் ஏன் அவளுடன் வரவில்லை? உங்களுக்கு என்னென்னவோ தோன்றலாம்…
நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.
- கவியருவி ம.ரமேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக