ஜூலை 21, 2015

பழமொன்ரியு - இலக்கணம் (நன்றி - ஈரோடு தமிழன்பன்)

பழமொன்ரியு இலக்கணம்
சென்ரியு, லிமரைக்கூ வகைமையைத் தமிழிலக்கியத்திற்கு அறிமுகப்படுத்திய ஈரோடு தமிழன்பன் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வகை இலக்கியம் பழமொன்ரியு ஆகும். ஒரு கூடைப் பழமொன்ரியு’ என்னும் இந்நூல், தமிழ்ச் சென்ரியு வகைமையின் பிரிதொரு பரிமாணம் ஆகும். சென்ரியுவின் இலக்கணத்தையும் நம் தமிழ் இலக்கியங்களில் மரபு வழியில் வரும் பழமொழியையும் இணைத்து இந்த புதிய வகைமையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சாலை இளந்திரையன் பழமொழிகளைப் பற்றி பழமொழிகளும் ஏனைய பாமரர் இலக்கியங்களும் அவைகளைப் படைத்து வழங்கி வந்த மக்களின் கருத்தோட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளன. எனவே மக்களின் சமுதாய இயல், அரசு இயல், நீதிஇயல், மற்றும் மத இயல், கோட்பாடுகளைப் பற்றிய ஆய்வுக்கு இவைகளை விடச் சிறந்த சாதனங்கள் வேறு இல்லை.’ சாலை (இளந்திரையன், சமுதாய நோக்கில் பழமொழிகள், ப.10.) என்று குறிப்பிடுகின்றார். எனவே மக்களின் சமூகம், நீதி, அரசு, மதம் சார்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள பழமொழிகள் உறுதுணை புரிகின்றன என்பதை அறிய முடிகின்றது.

பழமொழிகள் என்பன சமூக வரலாற்றைப் பிரதிபலிப்பன, மானுட அனுபவச் செறிவுகளும், பிழிவுகளும் வாழ்க்கை எதிரொலிப்புகளும்- விமர்சனங்களும் கொண்டு – மக்கள் பேச்சில் இடம் பெற்று – மிகுந்த கவர்ச்சியும், சுவையும், ஈர்ப்பும் உடையனவாக விளங்குவன.

தமிழ்ப் பழமொழிகளுக்கு சென்ரியுத் தன்மை இயல்பாகவே உண்டு. ஆயின் பழமொழி என்னும் வரையரை தாண்டி இலக்கியப் படைப்பாகும் நிலைக்கு அவற்றை இட்டுச் செல்லும் முயற்சி – பழமொழி நானூறுக்குப்பின் தொடரோட்டமாக இல்லாமற்போயிற்று. இப் பழமொன்ரியு நூலில், பழமொழிகள் சென்ரியுத் தன்மையில் இலக்கியத் தகுதியடைவதைப் படிப்பவர்கள் உணரலாம் என்கிறார் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

ஹைக்கூவிலிருந்து வேறுபட்ட சென்ரியு மக்களின் அன்றாடமைகளோடு அணுக்கமான உறவுடையது. புலமையாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களாலும் படைக்கப்பட்டது – பரிமாறப்பட்டது. ஹைக்கூவின் வடிவத்தை மட்டும் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் கட்டற்ற உரிமைகளோடு கட்டப்பட்டு எங்கெங்கும் பரவிய ஒரு மக்கள் இலக்கியம் என்று சென்ரியுவைக் குறிப்பிடலாம். சாமுராய்கள், ஜென் துறவிகள், கவிஞர்கள் என்கிற தகுதித்தரம் படைத்தவர்களுக்காக, சென்ரியு காத்திருப்பதில்லை. என்றாலும், வடிவ வார்ப்புக்குத் தேவையான அளவுகூட ஜப்பானிய மொழியில் பயிற்சி இல்லாமல் – சென்ரியுப் பக்கம் தலைகாட்ட முடியாது என்றும் தமிழன்பன் அவர்கள் சென்ரியுவின் கடினத்தையும் எடுத்துரைக்கின்றார்.

பழமொன்ரியு இலக்கணம்
தமிழ்ப் பழமொழியும் ஜப்பானிய சென்ரியுக் கவிதையும் காதல் மணம் புரிந்து பெற்றெடுத்த கவிதைப் பிள்ளை பழமொன்ரியு என்று பழமொன்ரியுக்கான இலக்கணத்தை எடுத்தியம்புகின்றார் என்பதால், பழமொன்ரியுவின் இலக்கணமானது, ஜப்பானிய சென்ரியு கவிதையின் இலக்கணமும் நம் தமிழ்ப் பழமொழியின் அமைப்பும் இணைந்த வடிவம் என்பது பெறப்படுகிறது. நம் பழமொழி எவ்வாறு பழமொன்ரியுவாக்கப்பட்டுள்ளது என்பதைற்கு ஈரோடுத தமிழன்பன் அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்:

வேடிக்கையாய், விளையாட்டாய், கிண்டலாய், கேலியாய், சீண்டலாய் எழுதப்படும் சென்ரியுவில் பழமொழித்தன்மை, விடுகதை இயல்பு, அங்கதப் பாங்கு எல்லாம் இருக்கும். என்பதால், பழமொழிகளுக்கு ஒரு திருப்பம் கொடுத்து, ஒரு சிறு மாற்றம் கொடுத்து, அல்லது ஒரு பார்வைத் திரிபைப் புகுத்தி அவற்றுக்குப் புத்தொளி பற்ற வைக்கும் முயற்சியைப் பழமொன்ரியு நூலில் நிகழ்ந்துள்ளது என்னிறார். மேலும், கொஞ்சம் குத்தலாய், கொஞ்சம் குதர்க்கமாய், கொஞ்சம் தர்க்கமாய் – பழமொழிகளை மாற்றிப் போட்டால் சென்ரியுவாக அவை சிலிர்க்கின்றன; சிந்திக்க வைக்கின்றன; சிரிப்பை அள்ளி வீசுகின்றன என்ற கூற்றை மனத்தில் நிறுத்தி நாமும் பழமொன்ரியுக்களைப் படைக்க வேண்டும்.

ஒரு கூடைப் பழமொன்ரியு கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து பல பழமொன்ரியு நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் பிறக்க உள்ளன. காரணம் தமிழ் நாட்டில் ஏறக்குறைய 10,000 பழமொழிகள் இன்றும் வழக்கில் இருக்கின்றன என்பதால் சாத்தியமே. தமிழ்ப் பழமொழிகள் போலவே, தமிழ்ச் சொலவடைகளும் விடுகதைகளும் சென்ரியுவாக மாறக் காத்திருக்கின்றன என்று தமிழன்பன் எடுத்துரைப்பதால் இன்னும் இரண்டு புதிய இலக்கிய வகைமைகள் தமிழ் இலக்கிய உலகம் பெற்றெடுக்க வாய்ப்புள்ளது. இம்முயற்சியையும் ஈரோடு தமிழன்பன் அவர்கள்தான் பிரசவிக்க வேண்டும்; முடியும்.  ஒரு கூடைப் பழமொன்ரியு நூலிலிருந்து சில பழமொன்ரியுக்கள்:   

நீர் இடித்து நீர்விலகாது
நீருக்காக இடித்துக் கொண்டால்
மாநிலங்கள் விலகும்  

தவிடு தின்னும் ராசாவுக்கு
முறம் பிடிக்கும் மந்திரி
பட்டினியில் சாகும் மக்கள்

பதவி திரண்டு வந்தபோது
ஐயோ! பாராளு மன்றம்
கலைக்கப்பட்டு விட்டதே

‘ஊர் என்றால் சேரியும் இருக்கும்
சேரி சீறினால், சேரி சீறினால்
அந்த ஊர் எங்கு இருக்கும்?’

குட்டக் குட்டக் குனிபவன்
முட்டாள்; பார்த்துக்கொண்டே
போகிறவன் யார்? அயோக்கியன்.

நாய்வேசம் போட்டால் குரைக்கத்தான்
வேண்டும்; வேசம் போட்டுப்போட்டு
நாயே ஆகிவிட்டால்?

ஆறிலும் சாவும் நூறிலும் சாவும்
அம்மா வயித்திலே பொண்ணா
இருக்கையிலும்தான் சாவு!

பாத்திரம் அறிந்து பிச்சைப்போடு;
பிச்சை எடுக்க வைத்தவன் தலையில்
அந்தப் பாத்திரத்தைப் போடு.

உப்பைத் தொட்டுக்கொண்டே
உரலை விழுங்கியவன்; ஊறுகாய்
தொட்டுக்கொண்டு, எதை விழுங்குவான்?

பழகப் பழகப் பாலும்
புளிக்கும், பழகாமல் இருந்தால்
எட்டி என்ன இனிக்குமோ?

ஒருநாள் கூத்துக்கு மீசையை
எடுத்தவன் மறுநாள் கூத்துக்கு
மீசையை வரைந்தான்.

மணலைக் கயிராய்த் திரிக்கிறது;
வானத்தை வில்லாய் வளைக்கிறது;
தேர்தல் அறிக்கை சரியாய் இருக்கும்.

பெண் என்றால் பேயும் இரங்கும்
ஆனால் ஆண்பேய் என்றால்
இரங்கவே இரங்காது எப்போதும்.

ஆக வேண்டும் என்றால் காலைப்பிடி
ஆகாதென்றால் கழுத்தைப் பிடி
இரண்டும் இல்லையா ஓட்டம் பிடி.

ஏழைக்கேற்ற எள் உருண்டை;
எப்போதும் எள் உருண்டையே தின்ன
ஏழை என்ன கோழையா?
     பழமொழிகள் சமுதாயத்தைச் செம்மைப்படுத்துபவை, தவறுகளைச் சுட்டிக்காட்டி, திருத்தும் தன்மைகொண்ட பழமொழிகளில் சென்ரியு தன்மையை ஏற்றி சென்ரியுவின் தனித்தன்மையான நகையுணர்வை மேலும் கூட்டி நாமும் பழமொன்ரியு கவிதைகளை சிறப்பாகப் படைத்து தமிழ் இலக்கிய உலகிற்கு அளிப்போம்.

ஈரோடு தமிழன்பன் – ஒரு கூடைப் பழமொன்ரியு
பாப்லோ – பாரதி பதிப்பகம்
95,2 ஆம் முதன்மைச் சாலை
போரூர்த் தோட்டம் 2 ஆம் கட்டம்
சென்னை – 95
தொலைபேசி – 044 23862121கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக