ஆகஸ்ட் 17, 2015

ஹைக்கூவில் பருவ காலங்கள்

ஹைக்கூவில் பருவ காலங்கள் 
ஹைக்கூவில் எப்போதும் ஒரு பருவ வார்த்தை இருக்கும். அவ்வார்த்தை கவிதையின் சூழலைப் புலப்படுத்தும். அது ஒரு விதையாக, உணர்ச்சி உலகின் விசையாக, ஒலி, வாசனை, நிறம் இவைகளாக இருக்கும். இவ்வாறு சுருங்கச் சொல்லப்பட்ட ஒன்றின் உருவம், நாம் நிலவு எனக் கூறும்போது, இலையுதிர் கால முழுமதியைக் குறிக்கிறது. வசந்த காலத்தைக் குறிக்க மங்களான நிலவு, மழைக்காலத்தில் குளிர் நிலவு என வரும் (முனைவர் மித்ரா, ஜப்பானிய, தமிழ் ஹைக்கூக்கள், ப.16). ஹைக்கூ ஒரு காலத்தில் பருவங்களுக்கேற்றபடியும் கருத்துக்களுக்கேற்றபடியும் பிரிக்கப்பட்டன. அதில் ஐந்து பருவங்கள் உள்ளன. புத்தாண்டு, வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் காலம் என ஐந்தாகும். தற்காலத்தில் பருவகாலமின்றி எழுதுவது வழக்கமாகிறது; பருவம் தெரிவிக்கப்படாமல் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் ஒரு மறைமுகமான கருத்து ஏதாவது ஒரு பருவத்தைப் பற்றி இருக்கும்போது கவிதை மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. நாமும் தமிழ் ஹைக்கூக்களை மதிப்புடையதாகச் செய்வோம். பருவ காலங்களுக்கான பகுப்புகள் (கருப்பொருள்) கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மித்ரா, நெல்லை சு. முத்து, நிர்மலா சுரேஷ், பரிமளம் சுந்தர் ஆகியோரின் ஹைக்கூ ஆய்வு நூலிலிருந்து தொகுக்கப்பட்டு எடுத்துக்காட்டப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

வசந்த காலம்:
வசந்த காலம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் வருவதாகும்.
பருவம், தட்ப வெப்பம்:
நெடிய பகல், மெல்ல நகரும் நாள், இளவேனில் பகல், இளவேனில் கனவு, நெருங்கும் கோடை, வெப்பம், அமைதி, தெளிவு, குளிர்ச்சி.
வானவியல் பகுப்பு:
மங்கிய நிலவு, நிலவொளி, உறைபனி, மாலைப் பனி, பலமான காற்று, கிழக்குக் காற்று, இனிய தென்றல், மங்கிய காலை சூரிய ஒளி, வசந்த கால நிலவு.
புவியியல் பகுப்பு:
காடும், பெயரில்லாத மலையும், மூடுபனி, கடற்கரை, மந்தமான நீரோட்டம், நீளமானகரை, கடலின் நீரோட்டம், நீரின் சத்தம், சதுப்பு நிலம், கறம்பு நிலம், பசுமையான வயல்கள், தொலைவில் உள்ள வீடுகள்.
வாழ்வியல் பகுப்பு:
கடற்கரை மணலில் காலடிச் சுவடுகள், காதல் செயல்கள், வேட்டையாடுதல், நெல்விதைத்தல், தேயிலை பறித்தல், கிளிஞ்சல் சேகரித்தல்.
விலங்குகள்:
காதல் பூனைகள், பூனைக் குட்டிகள், எலிவளை, குயில், முயல், புறா, ஆந்தை, காட்டு வாத்து, கொக்கு, நாரை, கோழி, தவளை, தவளைக்குஞ்சுகள், மணலில் குளிக்கும் குருவிகள்.
தாவரங்கள், பூக்கள்:
தாமரை, புன்னைமரம், பலதரப்பட்ட கோரைகள், நடனமாடும் கொடி, புற்கள், பூண்டுகள், கடல்பாசி, வெங்காயப் பூக்கள், மலை ரோஜா போன்றவை.

கோடை காலம்
மே, ஜூன் மாதங்களை உள்ளடக்கியது இது.
பருவ, தட்பவெப்பப் பகுப்பு:
கோடைக்காலைத் துவக்கம், கோடை வெப்பம், கோடை இரவு, கோடை குளிர்ச்சி, ஜூன் இருட்டு, குறுகிய இரவு.
வானவியல் பகுப்பு:
ஜூன் மழை, திடீர் மழை, வானவில், மின்னல், கோடை காலப் புயல்காற்று, குளிர்காற்று, கோடை மழை, வெப்பக் கதிரவன், எரியும் கதிரவன்.
புவியியல் பகுப்புகள்:
பச்சை மலைகள், தோட்டம், அமைதியான மலை, தோட்டத்தில் சூடான பொருட்கள், சதுப்பு நிலம், கோடை ஆறு, தெளிந்த நீர்வீழ்ச்சி.
வாழ்வியல் பகுப்பு:
சதுப்பு நிலத்தில் சவாரி செய்தல், மழைக்கால வேண்டுதல், நெல் விதைத்தல், பகல் தூக்கம், பறைகள் அடிக்கும் ஓசை, நிலவொளியில் துணிகளைத் துவைத்தல், குழந்தைகளைத் தூங்க வைத்தல், ஆற்றைக் கடக்கும் மகிழ்ச்சி.
பறவை, விலங்குகள், பூச்சிகள், பயிர்கள்:
கிராமத்துக் குருவிகள், மரத்தில் கட்டப்பட்ட குதிரை, மரங்கொத்தி, தோப்பில் விழும் அட்டை, குயில், நீர்க்கோழி, நண்டு, ஈக்கள், மின்மினி, வண்ணத்துப்பூச்சி, எறும்பு, பாம்பு, சிலந்தி, நத்தை, இறந்து விழும் விட்டில், காய்ந்துபோன நாணல்கள், சோளம், கோதுமை, திராட்சை, வாழை.

இலையுதிர் காலம்
ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களை உள்ளடக்கியதாகும்.
பருவநிலை, வெட்பதட்ப நிலைப் பகுப்புகள்:
நீண்ட இரவுகள், இரவுக் குளிர், ஒளிரும் நிலவு.
வானியல் பகுப்புகள்:
மூடுபனி கிளம்பல், சிவப்பு நிறச் சூரிய வெப்பம், தெளிவான நீல வானம், இலையுதிர் கால மழை, வெள்ளைப் பனித்துளி.
புவியியல் பகுப்புகள்:
நெல், வயல், சதுப்பு நிலம், வெள்ளிய கடலலைகள், பரந்த கடல், பயங்கரமான மலைகள், வரிசையான மலைகள், இருளடையும் மலை.
வாழ்வியல் பகுப்புகள்:
மாலை நேரத்தில் பாதை வழியாக யாரும் போகாமை, இலையுதிர் காலத்தனிமை, குறட்டை ஒலி, புல்லின்மீது நடத்தல், காளான் சேகரித்தல்.
விலங்குகள்:
சிவப்புத் தும்பிகள், காய்ந்த கிளையில் அமர்ந்த காக்கை, கொக்கு. காட்டுப் பன்றிகளை அசைக்கும் காற்று, சப்தமின்றிச் செல்லும் காகம், சுவர்க்கோழி கூவுதல், பூனைகள், நடுங்கும் குரங்கு, இறந்த உருப்பில் அமர்ந்திருக்கும் காக்கை, பசுவின் கொட்டகையில் கொசுக்கள், சிள்வண்டுகள், புல்புல் பறவை, நாரை, மரங்கொத்திப் பறவை, வெட்டுக்கிளி, பூச்சிக் குரல்.
தாவரப் பகுப்புகள்:
சோளம், கோதுமை, திராட்சை, வாழை, ரோஜா ஆகியவை.

குளிர்காலம்
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கியது.
பருவகாலம், தட்பவெப்பப் பகுப்பு:
குளிர்காலம், குளிர்காலத் துவக்கம், குளிர்கால இரவு, மழைகால முதல் மழை, மழைகாலத் துவக்கம், மேமாத மழை, ஜூன்மாத மழை.
வானவியல் பகுப்பு:
குளிர் நிலவு, மங்கிய நிலவொளி, தேய்ந்த நிலவு, நள்ளிரவு மழை.
புவியியல் பகுப்பு:
சமவெளியில் ஓடும் மழை, ஆறு, சேதமான பாலம், நீர்வீழ்ச்சி ஓசை, பெயரில்லா சிற்றாறு.
வாழ்வியல் பகுப்பு:
முள்ளங்கி பிடுங்குதல், கண்களுக்கு வலி உண்டாவதால் விளக்கு ஏற்றாமை, அதிக குளிர்ச்சி, போர்வை, கம்பளியின் தேவை.  மழையால் குழந்தையை அழைக்கும் தாயின் பாசக் குரல்.
பறவை விலங்குகள்:
குளிர் காலத்தில் உயிரினங்களின் இயக்கம். தொடர் மழையால் மாட்டுக்கொட்டகை நீரில் மூழ்குதல். இரவு பகல் என்று அறியாமல் கூவும் சேவல். மழையில் எருதுகள், மழையில் திரியும் பூனை, தேரையின் அடங்கிய குரல்,  இடைவிடாது ஒலிக்கும் பூச்சிகளின் பாட்டு.
தாவரங்கள்:
மழையால் பாதிக்கப்படும் தோட்டம், காற்றால் பாதிக்கப்படும் பயிர்கள் - வயல்வெளிகள், வெளிவரும் புற்கள், மரமொட்டுகள் வெளிவருதல், மழையால் ஒன்றன்மீது ஒன்றாக விழும் இலைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக