மே 15, 2016

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 24

(2) சேற்றில் கால்கள்
சிக்க சிக்க… நடக்கும்
எருதுகள்

முதலில் இப்படி எழுதப்பட்டது:
(1) உழவனின் கால்
சேற்றில் சிக்க சிக்க… நடக்கிறது
நான்கு கால்களில் எருதுகள்

ஹைக்கூ வாசிப்பின்படி முதல் இரண்டு அடிகளை வாசிக்க ‘சிக்க சிக்க’ எது நடக்கிறது? யார் நடக்கிறார்? நடக்கிறார்கள்? என்று வினா எழுகின்றது. மூன்றாவது அடியில், எருதுகள் என்று வரும்போது, உழவனின் கால்தான் சேற்றில் சிக்குகிறது எனவும் பொருள் விரியும். திருத்தப்படாத ஹைக்கூவில் (1) உழவுன், சேறு என்பதால் அவன் வயலை உழுதுகொண்டிருக்கலாம். ‘சிக்க’ என்பதால் அது ‘சேடை’யாக இருக்கலாம் என்பது உறுதியாகிறது. ‘சிக்க’ என்று ஒரு முறைமட்டுமே எழுதியிருக்கலாம். ஏன் இரண்டு முறை என்றால், ‘சிக்க’ ‘சிக்க’ என்று வரும்போது அவர் புதியவர் என்று பொருள்படவும் செய்யும்… மேலும், அவர் சலித்துப்போகாமல் மீண்டும் மீண்டும் உழுதலையும் எடுத்துக்காட்டும். இரண்டாவது அடியில் ‘நடக்கும்’ என்பது ‘நடக்கிறது’ என்று முதலில் எழுதப்பட்டது. பின்னர் உழுபவருக்கும் எருதுகளுக்கும் பொருந்துமாறு சிந்திக்க ‘நடக்கும்’ என்பது சரியெனப்பட்டது. ஹைக்கூ வாசிப்பின்படி திரும்பவும் முதலிரண்டு அடிகளை வாசித்துவிட்டு மூன்றாவது அடிக்கு வருகிறோம். ஹைக்கூவின் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்கு பெயர்ச்சொல் மூன்றாம் அடியில் அமைய வேண்டும் என்ற அறிஞர்களின் கூற்றுப்படி எருதுகள் எழுதப்பட்டது. மூன்றாவது அடியில் ‘எருதுகள்’ என்று மட்டுமே கூட வந்திருக்கலாம். பின்னர் ஏன் அந்த ‘நான்கு கால்களில்’ என்றால், அந்தப் பக்கமாய் போகும் – பார்க்கும் யாரேனும் இப்படிப் பேசிக்கொண்டு போகலாம்: “நாலு காலு இருக்கிற மாடுகளே சிக்காம நடக்குதுங்கள்… அவரைப் பாரு…” என்பதாலும், வடிவ நெருடலுக்கு இட்டுச் செல்லாத அமைப்புக்குமாக சேர்த்தே எழுதப்பட்டது. இறுதியில் உழவன் என்று ஏன் முதலிலேயே சுட்டிக்காட்ட வேண்டும் என்று எண்ணி, இறுதியாக கொஞ்சம் மாற்றி (2வது) – ஹைக்கூவாக மாற்றம் செய்யப்பட்டது. இப்போது ஒன்று, இரண்டிற்கும் மேற்பட்ட பொருளைத் தரும் ஹைக்கூவாக மாறியிருக்கிறதை கவனிக்கவும்.  

முதலில் இப்படி எழுதப்பட்டது:
(1) உழவனின் கால்
சேற்றில் சிக்க சிக்க… நடக்கிறது
நான்கு கால்களில் எருதுகள்

முடிவாக:
(2) சேற்றில் கால்கள்
சிக்க சிக்க… நடக்கும்
எருதுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக