செப்டம்பர் 21, 2016

இதுதான் ஹைக்கூ - 19 -காவனூர்.சீனிவாசன்

ஹைக்கூ மிகப்பெரிய காடு. இதில் பயணிப்பதென்பது கடினமானவொன்று. ஆனாலும் கடப்பவர்களுக்கு அபூர்வமான மலர்கள் கிடைக்கக்கூடும்.
ஒரு நீண்ட தவம். ஹைக்கூ என்பது பாலைவனத்தில் அரிதாய் கிடைக்கும் நீர்.
காலம் கற்றுக்கொடுக்கின்ற அரிய அனுபவங்கள்; எதிர்பாராமல் நேர்கொள்ளும் காட்சிகள் உணர்வுபூர்வமாக முன் நகர்த்திவைக்கையில் சூட்சுமமாக விரிகின்றன வேறு வேறு கோணங்களில்
அவரவர் பார்வைகளில்.
ஒரு ஆழ்ந்தபுரிதலுடன் ஒரு அவதானிப்பு. மனவேர்களை தீண்டி ஊடுருவி ஒரு இனம்புரியா சவ்வூடுபரவலை சில ஹைக்கூக்கள் நிகழ்த்திச்செல்லாமலில்லை.
கோபம் ,இறுக்கம், சமூக அக்கறை, அன்பின் ஈரம், இயற்கை, ஆன்மீகம், மனிதநேயம் இன்னும் இன்னும் சொற்களில் இழைபிரித்து இந்த ஹைக்கூக்கள் ஒரு குண்டூசியின் கூர்முனை போல் நறுக்கென்று தீண்டி அதிர்வையும்; சில இடங்களில் மலர்போல் மென்தன்மையும் கொண்டு மனதை நிறைத்துப்போகின்றன.
ஆழமுடன் வேரூன்றி கூர்மையுடன் வெளிப்படுகிற இக்கவிதையின் உட்பரிமாணங்கள் பல்வேறு நுட்பமான மனஇழைகளைக்கொண்டு பின்னப்படுகிறது. இதில் பிரபஞ்சவெளியின் ஒவ்வொரு துகளும் பாடுபொருளாக கொணரப்படுகின்றன.
புதிய தகிப்போடும்; நுட்பமான பார்வைகளோடும் கவிஞர்கள் எழுதிவருகின்றனர்.
எளிய சொற்கள் தான் ; இருண்மை அறுத்த நிலை; அரிதார ஒப்பனைகள் ஏதுமற்று மூன்றாம் வரியில் ஒரு வீர்யம். நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரிஅல்லது நெருங்கி இதயம்தீண்டி நெகிழச்செய்யும் ஒரு தென்றல்போல் ஒரு கணம் உச்சிமுதல் பாதம்வரை நிரம்பிவழியும் ஒரு உணர்வோட்டத்தை நிறைத்துப்போகிறமாதிரி காட்சிவிரிவுகள் நம்மை நகரவிடாமல் கட்டிப்போட்டுவிடுகிறது ஒரே புள்ளிக்குள்.
ஒரு படைப்பாளி , கவனத்தை கவரும் வகையில் தன்னை எந்த வடிவத்துக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளும் சாத்யம் உள்ளது.
இருவேறு கவிஞர்கள் வாழ்வும், இடமும் ,இருத்தலும் வேறு வேறு கோணங்களில் இருந்தாலும் சிந்தனைவயப்படும்போது; ஒரு பாடுபொருளை நகர்த்தி முன்வைக்கப்படும் போது இந்த கவிதைகளும் கற்பனைகளும் அவர்களை ஒரே கோட்டில் மிதக்கவிட்டு பார்த்து கோர்க்கின்றன.
இயற்கையோடு மனம் ஒன்றி ஒரு மாற்றுப்பிறவி சில கணங்களில் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. ஒரு முரண் இருவருக்கும் வேறு வேறு கோணங்களில் பதிவாகிறது.
நான் வாசித்துக்கடக்கிறேன் . பூவாவதா? மொட்டாவதா? அன்றி விரல்களாவதா?
அடிக்கடி மாற்றி மாற்றி கலைத்துப்போட்டு என்னை அடுக்கிக்கொண்டிருக்கிறது இந்த இருவரின் ஹைக்கூக்கள்.
பூவை பிடித்திருக்கும் பொழுது
மொட்டாகி விடுகின்றது
உள்ளங்கை.
- பஸ்லீ ஹமீட்.
பொழுது போகவில்லை
விரல்களை குவித்து விரிக்கிறேன்
ஒரு பூ மலர்கிறது.
-ஜெம்ஸித் ஸமான்.
ஒரு நெம்புகோலை கொண்டு சமுதாயத்தை புரட்டிப்போடுகிறதோ இல்லையோ ஆழ்மனதில் நம்மை பூக்க வைத்து பார்த்துவிடுகிறது இவர்களின் இந்த ஹைக்கூக்கள்.கொஞ்சநேரம் செடியாகித்தான் கிடந்தேன்.
-காவனூர்.சீனிவாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக